எழுத்து போதை
மாய வலை
நானே விறகு
நானே நெய்
நானே நெருப்பு
நானழிந்து
சுற்றமழிந்து
ஒன்றுமில்லாதது
எல்லாமாய்
மூப்பில் தளர்ந்து வியர்த்து
ஆறாவது விரலால் மூச்சு முட்டும்
பல முகங்களின் பாரதப்போர்
மிஞ்சும் முகம் புது முகம் படைக்கும்
அந்த முகம் பழக இன்னொரு போர்
எந்தக்கடலில் உப்பு வற்றியது
எந்த நதி மலையை அடைந்தது
பழைய முகம் புதிய முகம்
இந்த முகம் அந்த முகம்
எந்த முகம் நிரந்தரம்
முகங்களின் தட்டாமாலை உலகச்சுழற்சி
பயணத்தை அடையும் சேருமிடம்
மழையை அடையும் கடல்
அழிவில் பிறக்கும் படைப்பு
பிறப்பில் முடியும் இறப்பு
பிரம்மா உயிரெடுக்க சிவன் உயிர் கொடுக்க
நானே பிரம்மாவும் சிவனுமாயாகி
எல்லாமே ஒளியாகி
கண்ணுக்கு முன் பூதக்கண்ணாடி
நூறாயிரம் "நான்" உடன் போர்
போர் தர்மம் மறந்த போர்
எதிரிப்படையுடன் தன் படையையும்.
அம்பு அமாவாசைக்கும் நிறுத்தாத போர்
No comments:
Post a Comment