சமீபத்தில் மைலாப்பூருக்கு ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது. கார் இல்லாத காரணத்தால் ரயிலில் சென்றேன். சென்னை நகரில் ரயிலில் என் இரண்டாம் பயணம். பல்லாவரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க நின்ற வரிசையில் இந்திய வழக்கப்படி குழப்பம். எல்லோருமே அவசரத்தில் இருந்தனர். முடிந்த வரை வரிசையை மீறி செல்வதிலேயே குறியாக இருந்தனர். அதனால் கூவல்களுக்கும் திட்டுகளுக்கும் குறைவே இல்லை. மாலை நேரம். பெரும்பான்மையோர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த்ததால் எல்லோரிடமும் பொறுமை மிகக் குறைவாகவே இருந்தது. வியப்பளித்த விஷயம் என்னவென்றால் ஒரு சிறிய கைக்குழந்தையுடன் இருந்த ஒரு பெண் எல்லோரை விடவும் பொறுமையாக இருந்தது. சிலர் அவளை முந்திச் சென்றபோது கூட அவள் பொறுமை காத்தது அந்த சூழ்நிலையில் மிக வித்தியாசமாக இருந்தது. சில சமயங்களில் குறைந்த பட்ச நாகரிகம் கூட வித்தியாசமாகத் தெரிகிறது. இத்தனைக்கும் அப்பெண் அதிகம் படித்தவள் போலவும் தெரியவில்லை. நம் நாட்டில்தான் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் நடை உடைகளில் பெரும்பாலும் தெரியும். அந்தப்பெண் அமைதியாக குழந்தையை இடுப்பில் இருத்திக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள். குழந்தை அதன் கண்களை விரித்து வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி என்ன செய்யும் என்று ஒரு நினைவு என் மனதில் ஓடியது. நன்றாகப் படித்து ஒரு நல்ல வேலை கிடைத்து நல்ல படியாக குடும்பத்தை சுமக்குமா இல்லை படிப்பு வராமல் படிக்காமல் ஏதாவது கிடைத்த வேலை செய்து கஷ்டப்படுமா. இல்லை அதன் வளரும் சூழ்நிலை அதை தப்பான ஒரு வாழ்க்கைக்குத் தள்ளி விடுமா. அதற்கும் தெரியாது அதன் அம்மாவுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. அவர்களின் தினசரி வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் பெற்றோர்க்கு அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரம் இருக்கிறதா இல்லை அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்றாவது தெரியுமா. இது போல் எத்தனை குழந்தைகள் எத்தனை பெற்றோர்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் அதன் பெற்றோர்களின் படிப்பும் பொருளாதாரமும் முடிவு செய்யும் என்ற கசப்பான நிதர்சனம் உறுத்தியது. இந்த நினைவுகளில் முழுகியதால் வரிசையில் என் முறை வந்தது கூட எனக்குத் தெரியவில்லை. இந்த இடைவெளியில் எத்தனை பேர் என்னை வரிசையில் முந்திச் சென்றனர் என்பதும் தெரியாது.
ஒரு வழியாக என் முறை வந்து டிக்கெட் வாங்கினேன். உடனே ரயில் வந்து விட்டதால் எதையும் கவனிக்கவில்லை. ரயில் மிகக் குறைந்த நேரமே நிற்கும் என்று கேள்விப்பட்டதால் நான் நின்ற இடத்திற்க்கு அருகில் இருந்த பெட்டியில் ஏறி விட்டேன். பிறகுதான் தெரிந்தது அது முதல் வகுப்புப் பெட்டி என்று. எனக்கு நகரத்துக்குள் ஓடும் ரயிலில் முதல் வகுப்பு இருக்கும் என்று தெரியாது. சக பயணிகள் அதனால் பரவாயில்லை நீங்கள் இதிலேயே செல்லலாம் என்று கூறினர். அவர்கள் தினமும் ரயிலில் பயணம் செய்பவர்கள் போலும். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அடுத்த நிலையம் வரும் வரை இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த நிலையத்தில் இறங்கி இரண்டாம் வகுப்பில் ஏறிக்கொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த முதல் வகுப்புப் பெட்டியில் இருந்தவர்கள் ஓரளவுக்குப் படித்து ஏதாவது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்று உணரமுடிந்தது. பெரும்பான்மையோர் தனியாக வந்திருந்தார்கள் போலும். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. அக்கம் பக்கம் அதிகம் கவனம் செலுத்தாமல் தங்களது நினைவுகளிலேயே மூழ்கி இருந்தனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் கவலைப் பட நிறைய விஷயங்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்களை சற்று குறைவாக மதிப்பிடுவதும் புரிந்தது. அந்த ஒரு விஷயத்தில் ரயிலுக்கும் விமானத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பிரயாணம் செய்பவர்கள் எகானாமி வகுப்பில் பயணம் செய்பவர்களை நடத்தும் விதத்தை நிறையத் தடவை பார்த்துள்ளேன். சிலர் எகானாமி வகுப்பு பயணிகளின் முகத்தைக் கூட பார்க்க மாட்டார்கள். சிலர் முகம் சுழிப்பர். சிலர் மொத்தமாக் உதாசீனப்படுத்துவர். சிலர் வெளிப்படையாக வெளிப்படுத்துவர். அதற்கும் ரயில் பயணத்திற்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை. இத்தனைக்கும் விமானத்தில் பயணம் செய்வோர் பெரும்பாலும் படித்து நல்ல உயர் பதவியில் இருப்பர். படிப்பிற்கும் பண்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பது ஒவ்வொரு விமான பயணத்திலும் தெரியும்.
இதற்கிடையில் அடுத்த நிலையம் வந்து விட்டதால் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறினேன். ஒரு விதமான கலப்படமான பயணிகள். கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் வேலை செய்வோர், கூலி வேலை செய்வோர், ரிட்டயர்ட் ஆன பெரியோர், சிறு வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் இருந்தனர். இந்திய ரயில்களுக்கே சொந்தமான சுத்தமின்மை எங்கும் தெரிந்தது. அதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து அந்த சுத்தமின்மை யாருடைய கண்ணிலும் படுவதேயில்லை. இது இப்படித்தான் இருக்கும் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது. எனக்கும் அப்படி பழகியதுதான். ஆனால் இன்று நான் தனியாக பயணித்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்ததால் என் கண்ணில் அவை தெரிந்தன. இவற்றையெல்லாம் கவனிக்க என்று ரயில்வேயில் யாராவது இருக்கிறார்களா, இருந்தாலும் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும். அவர்களுக்கு என்ன விதமான பிரச்சனைகள் இருக்கின்றனவோ. மக்களும் ஒரு விதமான ஞான நிலையில் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகி விட்டனர். அப்போதய மன நிலையில் எனக்கு கவலைப்பட வேறு எந்த விஷயமும் இல்லாததால் என் சக பயணிகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.
நான்கு இளம் பெண்களும் ஒரு இளைஞனும் ஒரு ஜன்னலோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஏதோவொரு அலுவலகத்தில் பணி புரிபவர்கள் போலும். ஏதொவொரு கல்லூரியில் பணிபுரிகின்றனர் என்பது புரிந்தது. அன்று அவர்கள் கல்லூரியில் ஏதோ விழா. பெண்கள் பட்டுப் புடவை அணிந்திருந்தனர். அன்று காலை அவர்கள் கண்ணாடி முன் வழக்கத்தை விட அதிக நேரம் செலவழித்தது தெரிந்தது. அவர்களது எல்லா திறமைகளையும் காட்டி செய்த மேக்கப் மாலையில் மங்கியிருந்தாலும், அவர்களைத் தனியாகக் காட்டியது. எத்தனை நாட்கள் இதற்காக திட்டமிட்டார்களோ. கண்டிப்பாக என்ன புடவை அணிவது, என்ன நகை அணிவது, என்ன ரிப்பன் கட்டுவது, என்ன பொட்டு வைப்பது போன்ற விஷயங்களை முடிவு செய்ய நிறைய நேரம் செலவழித்திருப்பார்கள். கூடி பேசி இருப்பார்கள். அதற்காக தனியாக ஷாப்பிங்கும் செய்திருப்பார்கள். அன்றைய தின நிகழ்வுகளும், சந்தித்த புது மனிதர்களும், இள வயதிற்கே உறிய அதிக எனர்ஜி லெவலும் சேர்ந்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அன்றைய நிகழ்ச்சிகளும், சக பணியார்கள் நடந்து கொண்ட விதங்களும், மதிய உணவும், விலாவாரியாக அலசப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த இளைஞனும் அந்தப் பெண்களுடன் சரிக்குச் சரி பேசிக்கொண்டிருந்தான். வழக்கமாக இந்த மாதிரியான விஷயங்களில் ஆண்கள் வேறு விதமாக விவாதிப்பர். ஆனால் அந்த இளைஞன் அந்தப் பெண்களுடன் பெண்கள் மொழியிலேயே பேசிக் கொண்டிருந்தான். அவன் எப்போதும் அப்படித்தான் பேசுவான் என்பது தெரிந்தது. அவன் ஆண் நண்பர்களை விட பெண் நண்பர்களையே விரும்புவான் போலும். அவன் பெண்களிடம் வெகு சவுகரியாமாக உணர்பவன் போலும். பார்ப்பதற்க்கு அழகாக நல்ல சிவப்பாக சற்று பெண்தன்மையுடன் இருந்தான். பொதுவாக அந்த மாதிரியான ஆண்களை பெரும்பான்மையான பெண்களும் விரும்புவார்கள்தானே. மூவரில் சற்று குண்டான பெண் வெகுளித்தனமாக பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் மற்ற இரு பெண்களிடையே அவன் மனதைக் கவர கடும் போட்டி நடந்து கொண்டிருந்தது. யோசித்து யோசித்து அவனுக்குப் பிடித்தவாறு பேசிக்கொண்டும், அவன் கூறிய மிகச் சாதாரணமான ஜோக்குகளுக்கு கூட மிகையாகச் சிரித்துக் கொண்டும், ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டும், சரியாக இருக்கும் உடையை இன்னும் கொஞ்சம் சரி செய்து கொண்டும், உதடுகளை நாக்கால் ஈரம் செய்து கொண்டும், இன்னும் பலவிதங்களிலும் சாகசங்கள் செய்து கொண்டிருந்தனர். அவனின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கவனித்தனர். மற்றவர்களை கிடைத்த சந்தில் மட்டம் தட்டினர். அவர்களுடைய சாதாரண நடவடிக்கை இவ்வாறு இருக்காது. அந்த இளைஞனின் பொருட்டு அவர்களின் பேச்சு மற்றும் பாவனைகள் அதீதமாக இருப்பது தெரிந்தது. அடிக்கடி வெட்கப்பட்டனர். ஒரு பெண்ணின் மாநிறக் கன்னங்களில் கூட சிவப்பு தெரிந்தது. அவனோ இவற்றையெல்லாம் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. அந்த இரு பெண்களும் இன்னும் என்ன என்ன சாகசங்கள் செய்ய வேண்டி இருக்குமோ, இறுதியில் அவர்களில் யார் வெற்றி பெறுவார்களோ. அப்படி வெற்றி பெற்ற பெண் அவனிடம் இதே மாதிரி எவ்வளவு காலம் நடந்து கொள்வாளோ. யாருக்குத் தெரியும்.
சற்று தாண்டி ஒரு முதியவர் சூழ்நிலையின் எந்த பாதிப்பும் இல்லாமல் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார். அவரின் வயதையும் உதடுகளின் முணுமுணுப்பையும் வைத்து அவர் கடவுளிடம் ஏதோ பிரார்த்தனை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அவருக்கு அருகில் ஒரு நடுத்தர வயது தந்தை தன் நினைவுகளில் மூழ்கி இருந்தார். இன்று தேதி இருபதுதான் ஆகிறது மிச்சமுள்ள பத்து நாட்களை எவ்வாறு ஓட்டுவது, பள்ளி கட்டணம், அடுத்த மாத தீபாவளி, மகளின் திருமணம், மகனின் படிப்பு, மாதாந்திர கடன்கள் என்று அவர் யோசிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். மீன் விற்கும் இரு பெண்கள் அருகில் புடவையால் மூக்கை மூடிக்கொண்டிருந்த மாமியைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் வெற்றிலை சாறு வழியும் வாயுடன் சிரித்து சிரித்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். நல்ல வசதி உள்ளவர்களுக்கும் மிகக் குறைந்த வசதி உள்ளவர்களுக்கும் பிரச்சனையின் தீவிரம் குறைவுதான். நடுத்தர வர்க்க மக்களுக்கு பணம் சார்ந்த பிரச்சனைகளே பிரதானமாக இருக்கிறது. ஜன்னலோரத்தில் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒன்றே பெரிய பிரச்சனை ஆக இருக்கக்கூடிய வயதில் இருந்த ஒரு பெண் லேசாக கலங்கிய கண்களுடன் ஏதோ சிந்தனையில் இருந்தாள். இந்தப் பக்கம் ஒரு கல்லூரி மாணவர்கள் கூட்டம் அவர்களுக்கே உரிய உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே சில குறிப்பிட பெண்களும், ஆசிரியர்களும் அடிபட்டனர். அவர்களின் பேச்சில் அடிக்கடி சுனந்தினி என்ற பெயர் வந்ததிலிருந்து அவள் நல்ல அழகி என்பது தெரிந்தது. அந்த பெண்ணின் பெயரைச் சொல்லும் போது அவர்கள் கண்களில் தெரிந்த சிறு மயக்கம் அதை உறுதி செய்தது. ஒரு ஓரத்தில் ஒரு மனநிலை குன்றிய பிச்சைக்காரன், பூ விற்கும் பெண், பொறுமையில்லா சிறுவர்கள், கண்கள் விரிந்து ஆச்சரியத்துடன் வெளியே பார்க்கும் சிறு பெண்கள். நிறைய சமூகக் கோபம் உள்ள ஒரு தாடி வைத்த இளைஞன் எனக்குப் புரியாத வார்த்தைகள் கொண்ட தலைப்புள்ள புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அரசியல் விவாதத்தில் இருவர், சினிமா அலசும் ஒரு பெண்கள் கூட்டம் என்று பலர். என் மனம் இந்தக் காட்சிகளை எனது ஐரோப்பிய ரயில் பயணக் காட்சிகளுடன் ஒப்பிட்டது. முகத்திலறைந்தது போல் வித்தியாசம் புரிந்தது. அங்கு எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பர், நடந்து கொள்வர். பெரிய கூட்டத்தில் கூட ஒத்த தன்மை ( யூனிஃபார்மிட்டி ) இருக்கும். முதல் ஐந்து நிமிட பிரம்மிப்பிற்க்குப் பிறகு கவனிப்பதற்கு ஒன்றுமேயிருக்காது. போர் அடிக்கும். ஒரே மாதிரியான மனிதர்களையும் காட்சிகளையும் எவ்வளவு நேரம்தான் பார்ப்பது. ஆனால் இங்கோ வித விதமான மனிதர்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள். இதன் விட்த் ஆஃப் ஸ்பெக்ட்ரம் பார்க்கப் பார்க்க சலிப்பதேயில்லை. இவ்வளவு வித்தியாசங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உறித்தியது. ஏறக்குறைய எல்லோரிடமும் செல்ஃபோன் இருக்கிறது. அவர்களது அரட்டைக்கு இடையேயும், கவலைகளுக்கு இடையேயும், சிந்தனைகளுக்கு இடையேயும் செல்ஃபோனில் பேசுவதும், மெசேஜ் அனுப்பவதும் தவற வில்லை. முன்பு அணியும் உடைகள்தான் அந்தஸ்தின் அடையாளமாக இருக்கும். இன்றோ வைத்திருக்கும் செல்ஃபோனின் மாடலும் விலையும்தான் அந்தஸ்தை பறைசாற்றுகின்றன.
இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்ததில் வெகு விரைவில் பார்க் ஸ்டேஷன் வந்துவிட்டது போல் தோன்றியது. அங்குதான் நான் இறங்கி வேறு ரயில் மைலாப்பூருக்கு மாற வேண்டும். இறங்கியதும் அங்கு இருந்த கடைகள் என்னை வியப்பிலாழ்த்தின. டீ கடைகளும், உணவு கடைகளையும் நான் அந்த ரயில் நிலையத்தில் எதிர்பார்க்க வில்லை. அந்தக் கடைகளில் நல்ல வியாபாரமும் ஆகிக் கொண்டிருந்தது. அப்படியே நடந்து மேலே பாலத்தில் ஏறி ஐந்தாம் நடை மேடையை அடைந்தேன். அங்கு கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு பத்து பதினைந்து பேர்தான் இருந்தனர். உடனடியாக ரயிலும் வந்து விட்டது. இந்த முறை சரியாக இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறினேன். இந்த ரயில் சற்று தூரம் தரையிலும் பிறகு உயர்த்தப் பட்ட பாலத்திலும் சென்றது.
முந்தைய ரயிலுக்கும் இந்த ரயிலுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. பெரும்பாலும் படித்தவர்களும் சற்று வசதி கூடியவர்களும் இருந்தனர். ஆண்கள் பெரும்பாலும் சட்டையயை இன் செய்திருந்தனர். குழந்தைகள் பால், வெண்ணை போன்ற விஷயங்களால் போஷாக்குடன் இருந்தன. பெண்கள் நன்கு சலவை செய்து மடிப்பு கலையாத புடவைகளை அணிந்திருந்தனர். அவர்கள் பேசும் விஷயங்களும் முந்தைய ரயில் பயணிகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. வருமான வரி, பங்கு மார்க்கெட் போன்ற விஷயங்கள் அதிகம் இடம் பெற்றன. கர்நாடக சங்கீதம் அலசப்பட்டது. இளம்பெண்கள் சல்மான் கானையும், ஷாருக் கானையும், ஆமிர் கானையும் அலசினர். அவர்கள் பேச்சில் குறைந்தபட்சமாக மாதவன்தான் வந்தார். தமிழ் நடிகர்கள் அதிகம் அடிபட வில்லை. வைர நகைகள் தென்பட்டன. செல்ஃபோன் மாடல்கள் மாறின. அதிகமாக ஐபாட் வெள்ளை வயர்களைப் பார்க்க முடிந்தது. ரயிலின் பெட்டிகள் கூட நல்ல சுத்தமாக இருந்தது. படித்த வசதி கூடிய பயணிகள் அதிகமாக குப்பை போடாமல் வைத்துக் கொள்கிறார்களா அல்லது வசதி கூடியவர்கள் பயணிக்கும் ரயில் என்பதால் ரயில் நிறுவன அதிகாரிகள் அடிக்கடி சுத்தம் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த ரயில் நிற்கும் பெரும்பான்மையான நிலையங்கள் கூட சுத்தமாக இருந்தன. எல்லா நிலையங்களிலும் மின் விசிறிகளும், மின் தூக்கிகளும், மின் படிகளும் இருந்தன. இத்தனைக்கும் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களும் முந்தைய ரயிலில் பயணம் செய்தவர்களும் ஒரே கட்டணத்தைதான் கொடுக்கிறார்கள். இதில் மட்டும் ஏன் வித்தியாசம் என்று புரியவில்லை. இது புதிதாக உருவாக்கப் பட்டது என்றாலும் ஏன் இந்த வித்தியாசம். வசதி உள்ளவர்கள் அதே கட்டணத்திற்கு மேலான வசதிகளை அனுபவிப்பது எப்போது மாறும். இது ஒரு விதமான கம்யூனிச சிந்தனை போல் தோன்றினாலும், வழியில் கண்ட சில உண்மைகள் இதை உறுதி படுத்தின. மின் தூக்கிகளும், மின் படிகளும் தண்டையார்பேட்டை போன்ற கீழ் வர்க்க மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி நிலையங்களில் வேலை செய்ய வில்லை. ஆனால் திருவல்லிக்கேணி, மைலாப்பூர் போன்ற நிலையங்களில் வேலை செய்தன. இப்படி இருந்த போதிலும் ஒரு ரிட்டயர்ட் ஆன ஒருவர் ரயில் பெட்டிகளின் சுத்தமின்மை பற்றியும் ரயில்வே ஊழியர்களின் பொறுப்பின்மை பற்றியும் கோபமாக அருகிலிருக்கும் இன்னொரு ரிட்டயர்ட் முதியவருடன் பேசிக்கொண்டிருந்தார். இன்று எப்படியும் ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதப்படும். பொதுவாக வயதானவர்களுக்கு ஏன் எல்லாமே தவறாகத் தெரிகிறது. அவ்வாறு கூறும் கருத்துகளை இளைஞர்கள் உதாசீனம் செய்ய செய்ய இவர்களின் கோபமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தவறுகள் இந்த நாட்டில் நிறைய இருக்கிறது. ஆனால் எல்லாமே தவறாக இல்லை. இப்போது போலவே இந்த முதியவர்கள் காலத்திலும் தவறுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. அப்பொது அந்த காலத்து முதியவர்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். அதை இந்த காலத்து முதியவர்கள் அந்த காலத்தில் உதாசீனப்படுத்தி இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் நாளை முதியவர்களாகி இதோ போல் பேசத்தான் போகிறார்கள். அதை அன்றைய இளைஞர்கள் உதாசீனம் செய்யத்தான் போகிறார்கள். இந்த சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். எல்லொருமே தங்களது இளமைக் காலத்திலேயே உறைந்து விடுகிறார்கள். அதன் பிறகு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வருவதேயில்லை.
ரயிலுக்கு வெளியே செல்லும் என் சிந்தனைகளை ரயிலுக்கு உள்ளே இழுத்து வர வேண்டியுள்ளது. பெட்டியைச் சுற்றி பார்வையை ஓட்டினேன். காதில் வைரம் அணிந்த ஒரு மாமி தன் மருமகளின் பெருமைகளை அளந்து கொண்டிருந்தார். இப்போது மருமகள்களை புகழ்வது ஒரு ஃபேஷன் ஆகி வருகிறது. எப்படியோ குடும்பத்தில் சண்டைகள் குறைந்தால் சரி. பயணிகளின் குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது புரிந்தது. நியு ஜெர்சி அடிக்கடி வந்தது. வாரிசுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ளவர்கள் முதல் தரம், ஆஸ்திரேலியா சிங்கப்பூரில் உள்ளவர்கள் இரண்டாம் தரம், மத்திய ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் மூன்றாம் தரம் என்பது புரிந்தது. வாரிசுகள் எல்லொருமே இந்தியாவில் உள்ளவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் புரிந்தது. பலரும் ஒரே சமயத்தில் வேறு வேறு விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது யார் எதைக் கவனிப்பார்கள் என்றே தெரியவில்லை. பல பேர் இந்தப் பயணத்தில் பேசிய எல்லா விஷயங்களையும் பொதுவாக மூன்று குழுக்களாக பிரிக்கலாம். தன் குடும்ப பெருமைகள், சினிமா மற்றும் டிவி, உலகத்தில் இப்போதுள்ள தவறுகள். எல்லா விஷயங்களில் உள்ள தவறுகளைப் பற்றி பேசுவதற்கே நேரம் போதாததால் அவற்றை சரி செய்வதற்கு தன்னால் ஆன பங்களிப்பை செய்ய நேரம் யாருக்குமில்லை. அறிவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும், செயலில் சாதிப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் வசதியாக மறக்கப்படுகின்றன. நிறையப் படித்து நிறைய விஷயங்கள் தெரிந்தவன் அறிவாளி, புத்திசாலி, சாதித்தவன் என்று கருதப்படுகிறான். அதனால் படிப்புக்கு மட்டும் பெற்றோர்கள் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மிகக் குறைவான பெற்றோர்கள்தான் சொந்த புத்தியில் செயல்பட கற்றுக்கொடுக்கிறார்கள். அதைவிட மிக மிக குறைவான பெற்றோர்கள்தான் நல்ல மனிதனாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். படித்து நல்ல வேலையில் சேர்ந்து பொருளீட்டுவதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாகவே அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு வெளியே உள்ளவை உதாசீனப்படுத்தப்படுகின்றன. தன்னால் முடியாததை தான் செய்யத்தவறியதை தன் குழந்தைகள் மூலம் நிறைவேற்றத் துடிக்கும் துடிப்பு பெற்றோர்களிடம் மிக அதிகம். அதற்கு குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக தாங்கள் செய்யும் தியாகம் என்று ஒரு முலாம் வேறு. எத்தனை பெற்றோர் தங்கள் குழந்தைக்கு என்ன செய்யப் பிடிக்கிறது என்று அறிந்து அதற்குத் துணை நிற்கிறார்கள். நாட்டில் உள்ள எல்லாத் தவறுகளுக்கும் அரசியல்வாதிகளைக் குறை சொல்பவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகள் அரசியலில் ஈடுபட்டால் ஏற்றுக் கொள்ளுவர். ஏன் அதை ஆதரித்து நல்ல அரசியலை உருவாக்க பங்கு பெறுவதில்லை. தூரம் குறைவு என்பதால் மைலாபூர் விரைவில் வந்துவிட்டது.
மைலாப்பூர் வந்து, மின் படிகளில் இறங்கி சாலையில் கால் வைத்ததும் ஒரு அழுக்குச் சிறுவன் என் சட்டையைப் பிடித்து இழுத்து பிச்சை கேட்டான்.
No comments:
Post a Comment