சென்ற வாரம் வீட்டிலிருந்து ஆட்டோவில் கிளம்பினேன். வழியில் ஒரு 60 வயது மதிப்பில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து மெயின் ரோடு சற்று தொலைவு. ஆட்டோவை நிறுத்தி அவரையும் ஏற்றிக்கொண்டேன். அவர் தி நகருக்குச் செல்வதாகக் கூறினார். நான் செல்லும் வழி அதற்கு அருகில் இருந்ததால் வழியில் இறக்கி விடுவதாகக் கூறினேன். வழியில் பேசிக்கொண்டே சென்றோம். அவர் பெயர் தண்டபாணி என்றும் ஒரு தொழிற்சாலையில் ஃபிட்டராக வேலை செய்து ஓய்வு பெற்றதாக அறிந்தேன். அவருடைய பேச்சு வழக்கமான அந்த வயதிற்கே உறியதாக இருந்தது. இன்றைய தலைமுறை பற்றிய கவலை, விலைவாசி உயர்வு, சீதொஷ்ண நிலை மாற்றங்கள், அரசியல், பழங்கால உயர்வுகள், நிகழ்கால தாழ்வுகள். இன்னும் பல விஷயங்கள். எங்களது உரையாடலின் ஒரு பகுதி.
தண்டபாணி : இந்த ஏர்போர்ட் பிரிட்ஜ் வர ஞாயிறு திறக்கப் போறாங்க. முதலமைச்சர் வராராம்.
நான் : அப்படியா.
தண்டபாணி : இப்ப எல்லாம் அரசியல்வாதிக ஓரளவுக்கு யோசிச்சு செய்யர மாதிரி இருக்கு. அவங்க யோசிக்கறாங்களா இல்ல அதிகாரிங்களான்னு தெரியல. எதுவா இருந்தாலும் யோசிச்சா சரி. முந்தி எல்லாம் இந்த மாதிரி திறப்பு விழாவுக்கு பொது மக்களைப் பத்தி அவ்வளவா யோசிக்க மாட்டாங்க. ஆனா இப்ப பாருங்க இந்த விழாவ ஞாயித்துக் கிழம வச்சிருங்காங்க. அதுவும் சாயந்திரம் நாலு மணிக்கு. அந்த சமயத்தில அவ்வளவா டிராஃபிக் இருக்காது.
நான் : ம்
தண்டபாணி : விழா கூட ரோடு மேல நடத்தாம, ரோட்டுக்கு பக்கத்தில ஒரு கிரௌண்டுல நடத்தப் போறாங்க. பரவால. தொந்திரவு கம்மிதான்.
நான் : ம்
தண்டபாணி : எந்த கிரௌண்டுன்னு தெரியுமா? அந்த பழய ஏர்போர்ட் பக்கத்தில இருக்கறது இல்ல. இந்த புது ஏர்போர்ட் எதுக்க இருக்கே அது. அங்க கூட சின்னப் பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பாங்களே. ஒரு வாரம பாவம் பசங்க எங்க விளையாடராங்கன்னு தெரியல. மேட போடற வேலை நடக்குது.
நான் : பசங்க அதெல்லாம் வேற இடம் பாத்திருப்பாங்க. இதுக்காக விளையாடமயா இருக்கப் போறாங்க.
தண்டபாணி : அதுவும் சரிதான். இந்த பிரிட்ஜ் வந்தா டிராஃபிக் ஜாம் குறையும்னு சொல்றாங்க. பாக்கலாம். வந்தப்புறம்தான் தெரியும். இந்த பிரிட்ஜ் வேலை நடக்குற ரெண்டு வருஷமா டிராஃபிக் மொத்தமா பாதிச்சிருச்சு. ரோடு பாதி ஆகி, குழி குழியா, அதுக்கு நடுவுல பஸ் ஸ்டாண்டு வேற. இத ரெண்டு வருஷமா மக்கள் பாத்து பாத்து பழய ட்ராஃபிக் எப்படி இருந்ததுன்னே மறந்துட்டாங்க. அதனால பிரிட்ஜ் வந்து பழய ட்ராஃபிக் ஜாம் குறஞ்சுதான்னு யாருக்குத் தெரியப்போகுது. பாக்கலாம்.
நான் : அதுவும் சரிதான்.
தண்டபாணி : எனக்குப் பரவால. நான் பஸ் இல்ல ட்ரெயின்ல போறேன். நீங்க கார்ல போரவங்க. ரொம்ப கஷ்டம் இந்த டிராஃபிக்ல வண்டி ஓட்றது. இப்படியே டிராஃபிக் ஜாஸ்தி ஆயிட்டே இருந்தா எங்க கொண்டு போய் விடுமோ. எல்லாருக்கும் கார் வாங்கனும்னு ஆசை. இப்ப வசதி பொதுவா அதிகமாகிட்டதால நிறைய பேர் கார் வாங்க முடியுது, ஆனா ரோடு? அது அதே மாதிரிதானே இருக்கு. எங்க போய் கார் ஓட்டரது.
இது போலவே சற்று நேரம் டிராஃபிக் கவலையில் பேசிக்கொண்டிருந்தார்.
பின்குறிப்பு : தண்டபாணிக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது.
No comments:
Post a Comment