Monday, October 20, 2008

இன்று எதுவும் எழுத வரவில்லை


இன்று ஏன் எதுவும் எழுத வரவில்லை? கற்பனை வறண்டு விட்டதா இல்லை தமிழ் கைவிட்டதா. கண் முன் பல நிகழ்வுகளும் எழுதத் தூண்டி ஊர்வலம் வருகின்றன. என்னைப் பற்றிச் சொல் என்று போட்டி போடுகின்றன. என் பார்வையில் படியாதவை கை தூக்கி குதித்து என் கவனத்தை கவர முயல்கின்றன. ஆனாலும் எனக்கு எழுத வரவில்லை. ஏன்? எனக்கு முன்னால் இப்பொழுது உள்ளவை என்னை ஈர்க்க வில்லை. பிறிதொரு சமயம் அவையே என்னை ஈர்க்கலாம். இப்பொழுது ஈர்க்க வில்லை. இந்த பிழை காட்சியின் பிழையா இல்லை கண்ணின் பிழையா? வீடு எப்பொழுதும் போல அமைதியாகவே உள்ளது. இளங்காலைப் பொழுது ரம்மியமாகத்தான் உள்ளது. குயில் எப்பொழுதும்போலவே இனிமையாகக் கூவிக்கொண்டுள்ளது. குருவிகள் அதே சுறுசுறுப்போடு தாணியம் பொறுக்கிகொண்டுதான் உள்ளன. இரை கிடைத்த காகம் அதே பாசத்தோடு இதர காகங்களை அழைத்துக் கொண்டுதானுள்ளது. அதிகாலைக் காற்று அதே மணத்தோடு புத்துணர்ச்சி அளிக்கின்றது. மாறாமல் சில குழந்தைகள் அழுது கொண்டும் சில சிரித்துக் கொண்டும் பள்ளிக்குச் செல்கின்றன, விமானம் நேரம் தவறாமல் சுதி தவறாமல் ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும்தான் இருக்கின்றன. பால்காரன் தவறாமல் கடமையைச் செய்கிறான். செய்தித்தாள் சிறுவன் குறி தவறாமல் செடி மீது எறிந்து விட்டு செல்கிறான். என்னைச்சுற்றி எல்லாமே எப்பொழுதும்போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனக்கு எழுத வரவில்லை இன்று. வழக்கமாக சிந்தனைகள் முட்டி மோதும். அழுத்தும். தமிழ் சினிமாவில் வில்லன்கள் உருட்டுக்கட்டைகளோடு நாயகனைச் சுற்றுவது போல் பல சிந்தனைகள் சுற்றும். கேட்கும் இசையும் பார்க்கும் காட்சிகளும் சிந்தனைகளும் எழுதத் தூண்டும்.  சரி நாளை முயற்ச்சிப்போம். இன்று பால்காரனைப்போல், குயில் போல், குருவி போல், விமானம் போல் என் தொழிலை செய்கிறேன். நானொன்றும் பாரதி அல்லவே கவிதை எமக்குத் தொழில் என்று மார் தட்ட.

No comments: